கிளிநொச்சியில், காணிகளை நிலஅளவை செய்து அவற்றை சுவீகரிக்கச் சென்றவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காணி உரிமையாளர்களினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளாலும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி, பரமன்கிராய், வெட்டுக்காடு பகுதியில் நான்கு பேரின் சுமார் 8 ஏக்கர் வரையான காணிகளை நிலஅளவை செய்து சுவீகரிக்கச் சென்றவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

குறித்த கிராமத்தில் 1972ம் ஆண்டு தொடக்கம் இராமநாதன் தம்பையா, இராசையா பூபாலசிங்கம், சிவக்கொழுந்து நாகராசா, பொன்னையா கருணைச்செல்வன் ஆகியோர் 8 ஏக்கர் காணிகளில் வாழந்து வந்துள்ளனர்.

1991ல் இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாக இவர்கள் காணிகளை விட்டு இடம்பெயர்ந்ததுடன், இவர்களின் காணிகளைத் தற்பொழுது இராணுவத்தினர் ஆக்கிரமித்து முகாமிட்டு இருக்கின்றனர்.

இந்த நிலையில் காணி அனுமதிபத்திரம் உள்ள இந்த தனியார் காணிகளை நிலஅளவையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை சுவீகரிப்பதற்கு சென்றபோது காணி உரிமையாளர்களும், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்க காலத்தில் தனியார் காணிகளை பறிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளால் மக்கள் கவலை அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here